நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்... பாமக நிறுவனர் வலியுறுத்தல்
By: Nagaraj Mon, 14 Aug 2023 7:38:00 PM
சென்னை: நீட் விலக்கு சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சட்டசபையில் நீட் விலக்கு சட்டம் இயற்றப்பட்டு 19 மாதங்கள் கடந்துவிட்டன. இந்த சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பி 16 மாதங்கள் ஆகிறது. ஆனால், நீட் விலக்கு மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. நீட் விலக்கு சட்டம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் கேட்பதாலும், தமிழக அரசு விளக்கம் அளிப்பதாலும் பிரச்சனை நீடிக்கிறது.
நீட் தேர்வில் மதிப்பெண் பெற முடியாமல் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் தொடர்கிறது. மாணவர்களை சிறந்த எதிர்காலத்திற்கு தயார்படுத்துவதே கல்வியின் கடமை. ஆனால் அந்தக் கல்வியே மாணவர்களின் உயிரைப் பறிக்கக் கூடாது. தமிழகத்தில் நீட் தேர்வால் இன்னும் ஒரு உயிரைக்கூட இழக்கக் கூடாது.
அதை கருத்தில் கொண்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்கு தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.