- வீடு›
- செய்திகள்›
- சென்னையில் மட்டும் மாநகர பஸ்கள் மாவட்ட எல்லையை தாண்டி இயக்கப்படும்; அதிகாரிகள் தகவல்
சென்னையில் மட்டும் மாநகர பஸ்கள் மாவட்ட எல்லையை தாண்டி இயக்கப்படும்; அதிகாரிகள் தகவல்
By: Monisha Tue, 01 Sept 2020 10:10:08 AM
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, பல்வேறு முக்கிய தளர்வுகளுடன் 8-வது முறையாக ஊரடங்கு உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை அமலில் உள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த முக்கிய தளர்வுகளில் ஒன்றாக மாவட்ட எல்லைகளுக்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன் படி தமிழகம் முழுவதும் இன்று முதல் மாவட்ட எல்லைகளுக்குள் பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னையில் இன்று முதல் 3 ஆயிரத்து 300 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை பிராட்வே, கோயம்பேடு மாநகர பஸ் நிலையங்களில் இருந்து திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஊர்களுக்கும் சென்று வரும் வகையில் ஏற்கனவே பஸ்கள் இயக்கப்பட்டது.
தற்போது, மாவட்ட எல்லைக்குள் என்று வரையறுக்கப்பட்டாலும், சென்னையில் மட்டும் மாநகர பஸ்கள் சென்னை மாவட்ட எல்லையை தாண்டி இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்படி, சென்னையில் இருந்து பழைய மகாபலிபுரம் சாலையில் திருப்போரூர் வரையும், ஜி.எஸ்.டி.சாலையில் கூடுவாஞ்சேரி வரையும், கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் வரையும், பூந்தமல்லி சாலையில் திருமழிசை வரையும், செங்குன்றம் சாலையில் பாடியநல்லூர் வரையும், திருவொற்றியூர் சாலையில் மீஞ்சூர் வரையும் பஸ்கள் இயக்கப்படும்.