நடிகை சித்ராவின் தற்கொலைக்கு மன அழுத்தமே முக்கிய காரணம் - காவல்துறை பரபரப்பு தகவல்
By: Sonia Fri, 11 Dec 2020 3:57 PM
நடிகை சித்ராவின் தற்கொலைக்கு மன அழுத்தமே முக்கிய காரணம் என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில் வசித்து வந்த பிரபல டி.வி. நடிகை சித்ரா, கடந்த 8-ந்தேதி இரவு, படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிறகு, அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை தொடர்ந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நிறைவடைந்து நேற்று உடல் தகனம் செய்யப்பட்டது. இது தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் மற்றும் தாய் தரப்பில் கொடுக்கப்பட்ட மன அழுத்தமே காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
படப்பிடிப்பு தளத்திற்கு ஹேம்நாத் சென்று சித்ராவிடம் தகராறு செய்து வந்ததாகவும், குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஹேம்நாத்தை பிரிந்து வருமாறு சித்ராவின் தாய் விஜயா தொடர்ந்து கூறி வந்ததால் சித்ராவிற்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே கணவர் மற்றும் தாயார் இருவர் மத்தியிலும் சிக்கிக்கொண்டு தவித்த சித்ரா அவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.