Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மலைவாழ் மக்கள் தொகுதியில் வெற்றி பெற முழு ஒத்துழைப்பு தர வேண்டும்- முதலமைச்சர்

மலைவாழ் மக்கள் தொகுதியில் வெற்றி பெற முழு ஒத்துழைப்பு தர வேண்டும்- முதலமைச்சர்

By: Monisha Wed, 30 Dec 2020 1:38:16 PM

மலைவாழ் மக்கள் தொகுதியில் வெற்றி பெற முழு ஒத்துழைப்பு தர வேண்டும்- முதலமைச்சர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2-வது நாளாக இன்று நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சேந்தமங்கலம் பகுதியில் கொல்லிமலை, சேந்தமங்கலம் உள்ளிட்ட 14 ஊராட்சி பகுதி மலைவாழ் மக்களின் சங்க பிரதிநிதிகள் மற்றும் மலைவாழ் மக்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார். அப்போது கொல்லிமலை மலைவாழ் மக்கள் தங்கள் பகுதிகளில் தார்சாலை, தெரு விளக்கு வசதி, மின்சார வசதி, கழிப்பிட வசதிகள் செய்து கொடுத்ததற்கும், மேலும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருவதற்கும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் கேட்டறிந்தார்.

பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா இருக்கின்ற காலத்தில் மலை வாழ் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கினார்கள். குறிப்பாக சொல்லவேண்டுமென்று சொன்னால் மலையில் வாழ்கின்ற மக்களுக்கு பாதை வசதி கொடுத்திருக்கின்றோம். இது ஒரு கடினமான வேலை. ஏனென்று சொன்னால் வனத்துறையின் மூலமாக அனுமதி பெற்று சாலை அமைக்க வேண்டி இருக்கிறது. இன்றைக்கு 1 கிலோ மீட்டருக்கு குறைவாக இருந்தால், மாநில அரசு அனுமதி கொடுத்து சாலை அமைத்து விடும். அதற்கு மேல் சாலை அமைக்க வேண்டும் என்றால், சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்றால், மத்திய அரசின் அனுமதி பெற வேண்டிய சூழல் இருக்கின்றது.

அம்மாவுடைய அரசு இன்றைக்கு கொல்லிமலை மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற மலை வாழ் மக்களுக்கு நல்ல சாலை வசதி செய்து கொடுத்து வருகிறது. அதை பிரதானமாக எடுத்துக்கொண்டு செயலாற்றி வருகின்றோம். அதோடு அவர்களுக்கு மின்சாரம் வசதி செய்து கொடுக்கின்றோம். பல ஆண்டு காலமாக மின்சாரம் இல்லாமல், இருக்கும் பகுதிகள் கண்டறிந்து படிப்படியாக அவர்களுக்கு மின்சார வசதி செய்து கொடுக்கப்படும்.

election,campaign,discussion,darsala,electricity facility ,தேர்தல்,பிரச்சாரம்,கலந்துரையாடல்,தார்சாலை,மின்சார வசதி

மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வந்து நாங்கள் திறந்திருக்கின்றோம். ரூ.8½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டிடம் கட்டி நானே நேரடியாக வந்து திறந்து வைத்திருக்கின்றேன்.

இங்கு எங்களுக்கு செல்போன் டவர் இல்லாத காரணத்தினால் குழந்தைகளுக்கு கல்வி கற்க முடியாத சூழல் இருக்கின்றது என்று சொன்னார்கள். இங்கு டவர் அமைப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் முயற்சி செய்கிறார்கள். நாமக்கல்- சேந்தமங்கலம் சாலையை விரிவுப்படுத்த டெண்டர் விட்டு இருக்கின்றோம். அந்த பணியும் விரைந்து செயல்படுத்தப்படும்.

2021-ல் சட்டமன்ற தேர்தல் வர இருக்கின்றன. எம்.ஜி.ஆர். காலத்தில் இந்த மலைவாழ் மக்கள் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெற்று இருக்கின்றது. அதேபோல் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த கால கட்டத்திலும் இந்த தொகுதி அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக நின்று வென்றது. எனவே சேந்தமங்கலம், ஏற்காடு மலைவாழ் மக்கள் சட்டமன்ற தொகுதிகளில் மீண்டும் அ.தி.மு.க. வெற்றி பெற முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என முதலமைச்சர் பேசினார்.

Tags :