திருமழிசை சந்தையில் சமூக விலகலை கண்காணிக்க ஐஆர்ஐஎஸ் கருவி பொறுத்தப்பட்டது
By: Nagaraj Wed, 08 July 2020 08:56:01 AM
சமூக விலகலை கண்காணிக்க கருவி... திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் சமூக விலகல் கடைபிடிக்கப்படுவதை கண்காணிக்க திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் ஐஆர்ஐஎஸ் என்ற கருவி பொருத்தப்பட்டுள்ளது.
திருமழிசை காய்கறி சந்தைக்கு வரும் சில்லறை வியாபாரிகள் சமூக விலகலை கடைபிடிக்காமல் காய்கறிகளை வாங்குவதால் கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது என பல்வேறு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இச்சந்தையில் சமூக விலகல் கடைபிடிக்கப்படுவதை, கண்காணிக்க, திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில், 3 கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள், ஒலிப் பெருக்கிகள் உள்ளிட்டவை அடங்கிய ஐஆர்ஐஎஸ் என்ற கருவி பொருத்தும் பணி நடைபெற்றது.
இப்பணியை ஆய்வு செய்தபின் திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன் தெரிவித்ததாவது:
திருமழிசை காய்கறி சந்தைக்கு வருபவர்கள் சமூகவிலகலை கடைபிடிக்க வேண்டும் என
ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அங்கு சமூக விலகல்
கடைபிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஆகவே, இப்புதிய
கருவி மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குளோபல்
தெர்மல் கன்ட்ரோல் சிஸ்டம் என்ற நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த
கருவி, கடைகளில் இரண்டரை அடி இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என்றால், தானாக
ஒலி எழுப்பி, அங்கிருப்பவர்களை எச்சரிக்கும். ராஜேஷ், சக்தி என்ற 2
பொறியாளர்கள் வடிவமைத்துள்ள இந்த கருவி மூலம் மாவட்ட காவல் துறை
அலுவலகத்தில் இருந்தவாறே கண்காணித்து, நடவடிக்கை எடுக்க முடியும்.
தமிழகத்தில்
முதல்முறையாக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இக்கருவியின்
செயல்பாட்டை பொறுத்து, மற்ற கடைகளிலும் மற்றும் மக்கள் அதிகம் கூடும்
வங்கிகள், கடைகள், பொது இடங்களிலும் இந்த கருவி பொருத்தப்படும் என்றார்.