சிறுதானிய உணவகம் நடத்த விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
By: Nagaraj Wed, 14 June 2023 6:26:36 PM
தஞ்சாவூர்: சிறு தானிய உணவகம் நடத்திட விருப்பமுள்ள மகளிர் சுயஉதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், கூட்டமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தஞ்சை கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 2023-24 சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு பொதுமக்கள் மத்தியில் சிறுதானியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணமும், சிறுதாளிய உணவு பழக்க வழக்கங்களை அதிகப்படுத்தும் வண்ணமும் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் பெருந்திட்ட வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் சிறுதாளிய சிற்றுண்டி உணவகம் நடத்திட விருப்பமுள்ள மகளிர் சுயஉதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், கூட்டமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பெறப்படும் விண்ணப்பங்களை மாவட்ட அளவிலான குழுவினால் கூர்ந்தாய்வு செய்யப்படும்.
மாவட்ட ஆட்சித்தலைவர் பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ள அல்லது அதனை சுற்றியுள்ள ஊராட்சியின் மகளிர் சுய உதவிக்குழு, உற்பத்தியாளர் குழுக்கள் கூட்டமைப்பு மட்டுமே தேர்வு செய்யப்படும். தகுதியுள்ள சுயஉதவிக்குழுக்கள் இல்லை எனில் சம்மந்தப்பட்ட குழு கூட்டமைப்பு தீர்மானத்தின் அடிப்படையில் அருகாமையில் உள்ள வேறு மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தேர்வு செய்யப்படும்.
மகளிர் குழு துவங்கப்பட்டு குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் முடிவுற்றிறுக்க வேண்டும். NRILM MIS இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். கூட்டமைப்பாக இருக்கும்பட்சத்தில் தரமதிப்பீடு செய்யப்பட்டு A அல்லது B சான்று பெற்றிருக்க வேண்டும். உற்பத்தியாளர் குழுவாக இருக்கும் பட்சத்தில் இருக்கும் பட்சத்தில் தரமதிப்பீடு செய்யப்பட்டு திட்ட நிதி பெறப்பட்டிருக்க வேண்டும்.
சுயஉதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள் கூட்டமைப்பு சிறுதானிய உணவு உற்பத்தி மற்றும் சிறு தானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் தகுதியான கிராமப்புற சமுதாய அமைப்புகள் தொடர்புடைய ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த வட்டார இயக்க மேலாளரை தொடர்புகொண்டு 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.