- வீடு›
- செய்திகள்›
- டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு - 2023ம் ஆண்டுக்குள் நடத்த வேண்டும் ... திருமாவளவன் கோரிக்கை
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு - 2023ம் ஆண்டுக்குள் நடத்த வேண்டும் ... திருமாவளவன் கோரிக்கை
By: vaithegi Tue, 20 Dec 2022 3:17:31 PM
சென்னை: தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை ... விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் தமிழக அரசுக்கு வைத்துள்ள கோரிக்கையில், "தமிழ்நாடு அரசு தேர்வாணையம் போட்டித் தேர்வுகள் குறித்தான ஆண்டுத் திட்டத்தினை அண்மையில் வெளியிட்டுள்ளது . அந்த ஆண்டுதிட்டத்தில் அனைத்து போட்டித் தேர்வுகளும் துறை சார்ந்த தேர்வுகளாக அமைந்துள்ளன. மேலும் பல இலட்சக்கணக்கான தேர்வர்கள் பங்கேற்கும் GR-IV தேர்வு பற்றிய அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தான் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கான தேர்வு 2024 ஆம் ஆண்டு தான் நடைபெறுமென்கிற சூழல் ஒன்று உருவாகியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பின்னர் பெரும்பாலான இளைஞர்கள் போட்டி தேர்வினை எழுத தயாரான சூழலில், சமீபத்தில் வெளிவந்துள்ள ஆண்டுத்திட்ட அறிக்கை அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த ஆண்டுத்திட்டம் போட்டித் தேர்வர்கள் அரசுத் தேர்வுகளுக்கு தயார் செய்யும் நிலையிலிருந்து விலகிச் செல்ல வழிவகுக்கும். எனவே இதன் காரணமாக வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
தேர்வு முறைகளில் தேர்வாணையம் கொண்டு வரும் சீர்திருத்தங்களை வரவேற்கும் மேலும் அதே வேளையில், தொடர்ந்து தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் கேள்விகள் முறையில் உருவாக்கிவரும் மாற்றம் தேர்வர்களுக்கிடையே கடந்த சில ஆண்டுகளாக ஓர் அயர்ச்சியையும், போட்டித் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதில் ஒரு குழப்பநிலையையும் ஏற்படுத்தி உள்ளது.
எனவே, தேர்வாணையம் போட்டித்தேர்வர்களின் மேற்கண்ட சிக்கல்களை கவனத்தில்கொண்டு நிலையான பாடத்திட்டம் மற்றும் கேள்விகேட்கும் முறை போன்றவற்றைச் சரியாக கையாள வேண்டுமென தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுகிறது.