Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • கர்ப்பிணி மனைவியை பக்குவமாக வழிநடத்த அப்பாக்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்!

கர்ப்பிணி மனைவியை பக்குவமாக வழிநடத்த அப்பாக்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்!

By: Monisha Sat, 11 July 2020 2:59:24 PM

கர்ப்பிணி மனைவியை பக்குவமாக வழிநடத்த அப்பாக்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்!

சினிமாவில் மட்டுமே அப்பாக்கள் மனைவியை தாங்குவதும் குழந்தைகளை இளவரசன், இளவரசியாக பார்ப்பதும் நடக்கிறது. நிஜ வாழ்க்கையில் அப்பாக்களின் பொறுப்பை வெகு சிலரே முழுமையாக புரிந்து கொள்கின்றனர். இந்த பதிவில் நாம் கர்ப்பிணி மனைவியை பக்குவமாக வழிநடத்த அப்பாக்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

அப்பாக்களே... உங்கள் வயிற்றில் குழந்தை இல்லாமல் இருக்கலாம். ஆனால், உங்கள் மனதில் கரு உண்டாகி இருக்கிறது. புதிய அப்பாக்களுக்கான புத்தகங்களை வாங்கி படியுங்கள். கர்ப்பக்காலம், பிரசவம், குழந்தை வளர்ப்பு போன்றவற்றை படித்து தெரிந்துகொள்ளுங்கள். உங்களது மனைவி தனக்கான நேரத்தை எடுத்துக் கொள்கிறாரா எனக் கவனியுங்கள். குழந்தை பிறப்புக்கான அனைத்து திட்டங்களையும் வகுத்து, மனைவியிடம் இதைப் பற்றி பேசுங்கள். ப்ரீநேடல் வகுப்புகளை நீங்களும் உங்கள் மனைவியும் இணைந்து சேருங்கள். நீங்களும் மனைவியுடன் சேர்ந்து ஈடுபட்டால் அதைவிட மகிழ்ச்சி என்ன இருக்க முடியும். குழந்தைக்காக என்னென்ன வாங்க வேண்டும் என இருவரும் சேர்ந்து திட்டமிடுங்கள். மனைவியிடம் நிறைய நேரத்தை செலவழியுங்கள்.

pregnant,wife,husband,child,childbirth ,கர்ப்பிணி,மனைவி,கணவன்,குழந்தை,பிரசவம்

உங்களது மனைவிக்குள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆளுமைகள் தென்படும். கர்ப்பக்காலத்தில் இப்படி மல்டிபள் டிஸ்ஆர்டராக மாறுவது இயல்பு. உள்ளுக்குள் பயம் இருக்கும். வெளியில் மகிழ்ச்சியாக பயணித்தாலும் பிரசவம் குறித்த பயம் நிச்சயம் இருக்கும். பிரசவத்துக்கு மனதளவில் தயாராகி இருக்க மாட்டார்கள். சில பெண்கள் நிறைய பயப்படுவார்கள். தோற்றத்தை நினைத்து, தாம்பத்யம் உறவு இல்லாத உங்களின் நிலையை நினைத்து, பாதுகாப்பின்மையால் பயந்து, குண்டாகி இருப்பதால் இனி உங்கள் கண்களுக்கு அழகாக தெரிய மாட்டோமா எனப் பயப்படுவார்கள். குழம்பியும் போவார்கள். உங்கள் மனைவியை புரிந்து, அதிலிருந்து தெளிய வையுங்கள்.

மனைவியின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். ஆராய்ந்து பாருங்கள். மனைவி தற்காலிகமாக மாறி இருக்கிறாள். இது மனைவியின் நிஜம் அல்ல. ஹார்மோன்களின் ஆட்டம் எனப் புரிந்துகொள்ளுங்கள். தினமும் மனைவியை அன்பாக அரவணைத்துக் கொள்ளுங்கள். மனைவி சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். உங்களது தோள்ப்பட்டையை, அவள் சாய்ந்துகொள்ள இடம் அளியுங்கள். அப்படியே உங்கள் மனதிலும் தாராளமான இடம் கொடுக்கலாம். பாசிடிவ் எண்ணங்களை மனைவியின் மனதில் விதைக்கலாம்.

pregnant,wife,husband,child,childbirth ,கர்ப்பிணி,மனைவி,கணவன்,குழந்தை,பிரசவம்

நீ ஒரு நல்ல தாயாக இருக்க போகிறாய்? நீ இப்போது அழகாக இருக்கிறாய்? நீ மிக சிறந்த துணை. உன்னுடன் நான் வாழ்வதில் மகிழ்ச்சி. உன்னுடன் இருக்கும் காதல் இன்னும் மெருகேறி இருக்கிறது. அப்பாவாகி இருக்கும் மகிழ்ச்சியில் நான் இருக்கிறேன். குழந்தையை பார்க்கும் நாளுக்காக காத்திருக்கேன் எனச் சொல்லுங்கள். இதை ஒருநாள் மட்டுமல்ல தினந்தோறும் வெவ்வேறு வடிவத்தில் சொல்லுங்கள்.

மனைவியின் கைகளை அடிக்கடி பிடித்துக் கொள்ளுங்கள். மெதுவாக மனைவியுடன் வாக்கிங் செல்லலாம். கண் பார்த்து பேசுங்கள். எங்கும் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும். திரைப்படம், டின்னர், இயற்கை சூழ்ந்த இடம் போன்ற இடங்களுக்கு மனைவியை அழைத்து செல்லுங்கள். அவளது தோற்றம் குறித்து தாழ்வு மனப்பான்மை இருந்தால் அதை எடுத்து சொல்லுங்கள். நீங்கள் மனைவியை விரும்புவதாக சொல்லுங்கள். மனைவியின் பாதுகாப்பாளனும் நீங்கள்தான். துணையும் நீங்கள்தான். மனைவி உங்களிடம் எதிர்ப்பார்ப்பது அரவணைப்பு, அன்பு, காதல், முத்தம், உங்களின் பொன்னான நேரம். இந்த சமயத்தில் உங்களின் தேவை உங்களது மனைவிக்கு நிறைய இருக்கும்.

pregnant,wife,husband,child,childbirth ,கர்ப்பிணி,மனைவி,கணவன்,குழந்தை,பிரசவம்

கீழே குனிந்து எடுப்பது முதல் தன் கால்களில் உள்ள முடியை அகற்றும் வரை எல்லாவற்றுக்கும் துணையாக இருங்கள். கால்களில் நகம் வெட்ட உதவி செய்யுங்கள். வீக்கமடைந்த கால்களுக்கு ஒத்தடம் கொடுக்கலாம். மிதமான மசாஜ் செய்யலாம். ஜூஸ், ஸ்மூத்தி, சுவையான உணவு ஏதாவது செய்து கொடுக்கலாம். உங்கள் மனைவி மகிழ்ச்சியாக உணரக்கூடிய அனைத்து விஷயங்களிலும் நீங்கள் இருவரும் இணைந்து செய்யுங்கள்.

தினமும் நீங்கள் சொல்ல வேண்டியது காதல் மந்திரம், நம்பிக்கை மந்திரம். நீ அழகானவள், அற்புதமானவள், ஒரு உயிரையே உருவாக்கும் அளவு சிறந்தவள் இப்படி போற்றுங்கள். நாள்தோறும் மனைவி எவ்வளவு முக்கியம் என எடுத்து சொல்லுங்கள். குழந்தையிடம் இருவரும் சேர்ந்து பேசுங்கள். சுலபமான, வலியில்லா பிரசவம் உனக்கு நடக்கும் என தைரியம் கொடுங்கள். குழந்தை வயிற்றுக்குள் வளர்வதுபோல் உங்களது திருமண பந்தமும் உங்களது மனைவியுடன் உள்ள காதலும் செழிப்புடன் வளரட்டும்...வாழ்த்துகள்!

Tags :
|
|