திருப்பதியில் பிரம்மோற்சவ விழா .. தமிழக, ஆந்திர மாநில அரசு போக்குவரத்து துறை சார்பில் 300 பஸ்களை இயக்கம்

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 27-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 5-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா கொண்டாடப்பட உள்ளது. இதை அடுத்து பிரமோற்சவ விழாவில் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் பெருமளவில் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக தமிழக, ஆந்திர மாநில அரசு போக்குவரத்து துறை சார்பில் 300 பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று திருப்பதியில் நடந்தது. கூட்டத்தில் ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஜிதேந்திரநாத் ரெட்டி பாஸ்கர் மற்றும் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன், மண்டல மேலாளர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 150 சிறப்பு பஸ்களும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 150 சிறப்பு பஸ்களும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து அதன்படி சென்னையில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக திருப்பதிக்கு 30 பஸ்களும், சென்னையில் இருந்து காளஹஸ்தி வழியாக 55 பஸ்களும், திருவண்ணாமலையில் இருந்து வேலூர் வழியாக 20 பஸ்களும், வேலூரில் இருந்து சித்தூர் வழியாக 65 பஸ்களும் மற்றும் கன்னியாகுமரி, திருச்சி, சேலம், ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வேலூர் வழியாக சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.

இதேபோன்று புதுச்சேரி, காஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணி வழியாக ஆந்திர மாநில பஸ்கள் இயக்கப்பட உள்ளது. தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருவண்ணாமலையில் இருந்து வேலூர் வழியாக 10 சிறப்பு பஸ்களும், கிருஷ்ணகிரியில் இருந்து குப்பம் வழியாக 15 பஸ்களும், கள்ளக்குறிச்சியில் இருந்து வேலூர் வழியாக 8 பஸ்களும், வேலூரில் இருந்து சித்தூர் வழியாக 26 பஸ்களும், திருப்பத்தூர் வேலூர் வழியாக 10 பஸ்களும், புதுச்சேரி காஞ்சிபுரம் வழியாக 10 பஸ்கள் என 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.