புரட்டாசி 3வது சனிக்கிழமையை ஒட்டி பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்... பெருமாளுக்கு உகந்த நாளான புரட்டாசி 3வது சனிக்கிழமையை ஒட்டி தமிழகம் முழுவதுமுள்ள பெருமாள் கோவில்களில் காலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில், காலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டு, சுமார் 2 கி.மீ.தூரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.

தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவிலில், அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றன. தொடர்ந்து பத்மாவதி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாளை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சேலம் குரங்குச்சாவடி அருகே நகரமலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் கோவிலில், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பக்தர்களுக்கு உடல்வெப்பம் பரிசோதிக்கப்பட்ட பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.