திருப்பதியில் வரும் 30ம் தேதி வரை இலவச தரிசனம் ரத்து

இலவச தரிசனம் ரத்து... திருப்பதி திருமலை கோவிலில் செப். 30 ம் தேதி வரையில் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஜூன் 11-ம் தேதி கட்டுப்பாடுகளுடன் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அனுமதி வழங்கப்பட்ட ஒரு சில நாட்களில் கோவிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இதுவரை திருமலையில் பணியாற்றும் தேவஸ்தான ஊழியர்கள் 170 பேருக்கும், 20 அர்ச்சகர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், கோயிலின் 2 ஜீயர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

2 அர்ச்சகர்கள் தொற்றுக்குப் பலியாகினர். இதையடுத்து, கோயில் நடை மூடப்பட்டது. இதனை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 29ம் தேதி முதல் மீண்டும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனிடையே கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வரும் செப்.30ம் தேதி வரையில் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.