சிதறு தேங்காய் உடைப்பதை கொண்டு வந்ததே பிள்ளையார்தானாம்... தெரிந்து கொள்வோம்

சென்னை: பிள்ளையாருக்கு பக்தர்கள் சிதறு தேங்காய் உடைப்பதை வழக்கத்தில் கொண்டுள்ளனர். அதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது. தடைகள் அத்தனையும் தூள் தூளாகி விட வேண்டும் என்பதற்காக சிதறு தேங்காய் உடைக்கிறார்கள்.

முழு முதல் கடவுளாகப் போற்றி வணங்கும் பிள்ளையாருக்கு நாம் எடுக்கும் விழாவே பிள்ளையார் சதுர்த்தி. விநாயகரை வணங்காமல் எந்தக் காரியமும் ஆரம்பிக்கப்பட மாட்டாது. பூஜைகள், ஹோமங்கள், யாகங்கள் என்று அனைத்து விசேஷ காரியங்களிலும் மஞ்சளில் பிள்ளையாரைப் பிடித்து வைத்துதான் பூஜை செய்ய ஆரம்பிப்பார்கள்.

பிள்ளையாருக்கு பக்தர்கள் சிதறு தேங்காய் உடைப்பதை வழக்கத்தில் கொண்டுள்ளனர். அதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது. தடைகள் அத்தனையும் தூள் தூளாகி விட வேண்டும் என்பதற்காக சிதறு தேங்காய் உடைக்கிறார்கள். சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் வீட்டை விட்டுக் கிளம்பும்போது ஒரு தேங்காய் உடைத்து விட்டுதான் அந்தப் புனிதப் பயணத்தை மேற்கொள்வர்.

திருஷ்டி சுற்றிப் போடும்போதும் தேங்காயை சிதறுகாயாக உடைப்பார்கள். விக்னம் என்னும் தடையை நீக்குபவன் விக்னேஸ்வரன் என்பதால் பெரும்பான்மையாக பிள்ளையார் கோயிலில் சிதறு தேங்காய் உடைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால், இந்த சிதறு தேங்காய் போடும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தவரே ஸ்ரீ விநாயகப் பெருமான்தான் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கிறது!
இதற்குப் புராணத்தில் ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது. மகோற்கடர் என்கிற முனிவராக ஒரு முறை அவதாரம் செய்த விநாயகர், காஸ்யப முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தார். ஒரு யாகத்துக்கு அவர்கள் புறப்பட்டபோது, ஒரு அசுரன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான். அப்போது விநாயகர் யாகத்துக்காகக் கொண்டு சென்ற கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை அவன் மீது வீசி எறிந்து அந்த அசுரனைப் பொடிப் பொடியாக்கினார்.

எந்த செயலின் பொருட்டு வெளியே கிளம்பினாலும் அதில் தடைகள் ஏற்படாவண்ணம் ஒரு சிதறு தேங்காயை விநாயகருக்குப் போட்டு வணங்கிச் செல்லும் பழக்கம் பக்தர்களுக்கு உண்டு. விநாயகரே தனக்கு வந்த தடையை தேங்காயை வீசி எறிந்ததன் மூலம்தான் தகர்த்தார். இதன் மூலம் முதன் முதலில் சிதறுகாய் போடும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தவரே விநாயகப் பெருமான்தான் என்கிறது புராணம்.