கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் உச்சியில் நாளை மாலை 6 மணிக்கு மகா தீபம்

திருவண்ணாமலை: நாளை அண்ணாமலை உச்சியில் மகா தீபம் .... பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல்தெய்வமான துர்க்கை அம்மன் பெரும் உற்சவத்துடன் கடந்த 14-ம் தேதிதொடங்கியது. தொடர்ந்து, பிடாரி அம்மன் மற்றும் விநாயகர் உற்சவங்கள் நடைபெற்றன.

மூலவர் சந்நிதியில் உள்ள தங்கக்கொடி மரத்தில் கடந்த 17-ம் தேதி அதிகாலை கொடியேற்றப்பட்டது. இதையடுத்து, பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் ஆரம்பமானது. 7-ம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் ‘மகா தேரோட்டம்’ நடைபெற்றது. கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் நாளை ஏற்றப்படவுள்ளது.அண்ணாமலையார் கோயிலில் உள்ள மூலவர் சந்நிதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படவுள்ளது.

விநாயகர், முருகன், அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர்சிறப்பு அலங்காரத்தில் மகா தீப தரிசன மண்டபத்தில் மாலை 4.30 மணி முதல் எழுந்தருளுகின்றனர். பின்னர், ஆண்-பெண் சமம்என்பதை உணர்த்தும் அர்த்தநாரீஸ்வரர் மாலை 5.55 மணியளவில் காட்சியளிக்கிறார். தொடர்ந்து, தங்கக் கொடிமரம் முன்புள்ள அகண்டத்தில் தீபச் சுடர் ஏற்றியதும், 2,668 அடி உயரம் உள்ள மலையின் உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

‘மோட்ச தீபம்’ என அழைக்கப்படும் மகா தீபத்தை பருவதராஜ குல வம்சத்தினர் ஏற்றி வைக்க உள்ளனர். அண்ணாமலையின் உச்சியில் ஜோதி வடிவமாக அண்ணாமலையார் காட்சி கொடுக்கவுள்ளதால், மூலவர் சந்நிதியின் நடை அடைக்கப்படும். மகா தீப தரிசனத்தை 11 நாட்கள் காணலாம்.மலை உச்சியில் மகா தீபம் ஏற்றியதும், அண்ணாமலையாரைக் குளிர்விக்கும் வகையில் ஐயங்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறவுள்ளது. முதல் நாளான வரும் 27-ம் தேதி இரவு சந்திரசேகரர், 28-ம் தேதி இரவு பராசக்தி அம்மன், வருகிற 29-ம் தேதி இரவு முருகர் ஆகியோரது தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.

உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் வருகிற 28-ம்தேதி கிரிவலம் செல்கிறார். வரும் 30-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் பெரும் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெறுகிறது.