யாழ்ப்பாணம் வெங்கடேச வரதராஜப் பெருமாள் ஆலய தேர்த்திருவிழா

ஈழத்து திருப்பதி எனப் போற்றப்படுவதும், மிகவும் பழமை வாய்ந்த ஆலயமுமான யாழ்.வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா சிறப்புற நடைபெற்றது.

தேர்த் திருவிழாக் கிரியைகள் இடம்பெற்றது. தொடர்ந்து வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூமாதேவி சமேதராக வண்ணை வெங்கடேச வரதராஜப் பெருமாள் உள்வீதி வலம் வந்து சித்திரத் தேரில் ஆரோகணம் செய்தார்.

சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டு விசேட தீபாராதனை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகரா கோஷம் முழங்க, பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் புடை சூழ சித்திரத் தேர் பவனி ஆரம்பமானது.

ஆண் அடியவர்கள் ஒருபுறமும், பெண் அடியவர்கள் மறுபுறமும் சித்திரத் தேரின் வடம் தொட்டிழுத்தனர். சித்திரத் தேர் வீதி உலா இடம்பெற்ற போது யாழில் பிரபல நாதஸ்வர, தவில் கலைஞர்களின் விசேட நாத சமர்ப்பணமும் இடம்பெற்றது.

சித்திரத் தேர் வீதி உலா இடம்பெற்ற போது அடியவர்கள் பஜனை பாடியும், வெங்கடேசன் நாமங்கள் உச்சரித்தும் வெங்கடேசப் பெருமாளைப் பக்திபூர்வமாகத் துதி செய்தனர். சித்திரத் தேர் மதியம் இருப்பிடம் வந்தடைந்தது.

இதேவேளை, இவ்வாலய வருடாந்த மஹோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா நேற்று காலை இடம்பெற்றதுடன் மாலை கொடியிறக்க உற்சவமும் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.