மதுரை கள்ளழகர் கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றம்; பக்தர்கள் பங்கேற்க முடியாத நிலை

மதுரை கள்ளழகர் கோவில் ஆடித்திருவிழா பக்தர்கள் இல்லாமல் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொரோனா வைரஸ் காரணமாக உலக பிரசித்தி பெற்ற மதுரை கள்ளழகர் கோவிலின் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதன் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம், வெறும் 4 பட்டர்களால் நடத்தப்பட்டது. ஆகம விதிப்படி பூஜைகள் நடத்தப்பட்டு, அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு செயற்கையாக வடிவமைக்கப்பட்ட தாமரை தடாகத்தில் இறங்கும் வைபவம் நடைபெற்றது.

இந்த உற்சவ நிகழ்ச்சிகள் அனைத்தும் www.tnhrce.gov.in என்ற இணையதள வாயிலாகவும், youtube temple live streaming மற்றும் கள்ளழகர் கோயில் முகநூல் மூலமாகவும் பொதுமக்களுக்கு ஒளிபரப்பானது.

இந்த நிலையில், சித்திரை திருவிழாவை தொடர்ந்து மதுரை கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடித் திருவிழாவும் நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான ஆடித்திருவிழாவும் கொரோனா வைரஸ் காரணமாக, பகதர்கள் இன்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மதுரை கள்ளழகர் கோவிலில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் விழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. கோவில் அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்பர். இந்த திருவிழாவையும் ஆன்லைனில் பக்தர்களுக்கு காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.