இயற்கை ஆச்சரியங்களில் ஒருவர் தங்கமணி குருசாமி; ஆடி மாத முதல் வெள்ளியில் ஆன்மீக நிகழ்வு

இயற்கையின் ஆச்சரியங்களில் ஒருவர்தான் தஞ்சை மாவட்டம் பூதலூரை சேர்ந்த தங்கமணி குருசாமி.

ஆன்மீகம், சமூகப்பணி, நலப்பணி, உழவாரப்பணி செய்தல் என்று ஆன்மீகத்தில் தன்னை மிகவும் ஆழமாக ஈடுபடுத்திக் கொண்டு கடவுள் பணியே கவலையை தீர்க்கும் பணி என்று இருப்பவர். இறைவனின் தொண்டே தனது வாழ்வின் முக்கிய பணி என்று சிறப்பான செயல்பட்டு வருபவர்தான் தங்கமணி குருசாமி அவர்கள்.

இவர்தான் இயற்கையின் ஆச்சரியங்களில் ஒருவராக அனைவரும் வியந்து பார்க்கும் வகையில் உள்ளார். அதற்கு காரணம் உள்ளது. இவருக்கு ஆண்டுக்கு ஒருமுறை ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி அளவில் ஏற்படும் ஆன்மீக நிகழ்வுதான்.

இயற்கையின் அற்புதங்களில் அதுவும் ஆன்மீகம் என்ற ஆழ்கடல் யாராலும் உணர முடியாத ஒன்று. எதனால் நடந்தது என்று ஆராயவும் முடியாது. ஆராய்ந்தால் அதன் ஆரம்பமும் தெரியாது முடிவும் புரியாது. இயற்கை அன்னையின் அற்புதங்களை ஆராய்ந்து இப்படிதான் என்று கணித்து விட முடியுமா. இயற்கையின் படைப்பில் அனைத்தும் உன்னதமானதே!!

அதுபோன்றதுதான் பூதலூரை சேர்ந்த தங்கமணி குருசாமிக்கு ஆண்டுக்கு ஒரு முறை ஏற்படும் ஆன்மீக நிகழ்வு. சரியாக ஆடி மாதம் முதல் வெள்ளியன்று நள்ளிரவு தங்கமணி குருசாமிக்கு ஆன்மீகமான ஒரு சம்பவம் நடக்கும். அதாவது இனி நடக்கும் செயல்கள் பற்றிய கேள்விகள் அவர் மனதில் எழும். அதற்கு விடையும் கிடைக்கும். அதை அப்படியே ஒரு பேப்பரில் எழுதி வைத்து கொள்கிறார். ஒரு வருடத்தில் என்ன நடக்கும்? அதுவும் முக்கியமான நிகழ்வுகள் குறித்து அவருக்குள் எழும் காட்சியலைகளும், அதனால் ஏற்படும் சம்பவங்களும் தெளிவாக தெரியும்.

கடந்த 2018ம் ஆண்டில் இவர் எழுதி வைத்தவற்றில் 90 சதவீதம் வரை அப்படியே நடந்துள்ளது. இவர் பற்றிய செய்திகள் நாளிதழ்களில் வெளியாகி உள்ளது. அதேபோல் இந்தாண்டு ஆடி மாதம் முதல் வெள்ளியன்று ஏற்பட்ட நினைவு அலைகளை குறித்து வைத்துள்ளார். அதில் சில முக்கியமானவை:

மேட்டூர் அணை இரண்டு முறை நிரம்பும். நெல், உளுந்து, பருப்பு, எள் ஆகியவை நல்ல விளைச்சல் காணும். தமிழகத்தில் பூமி வெடிப்பு ஏற்பட்டு நில அதிர்வு ஏற்படும். வெண்மையான பூச்சி விவசாயத்தை அழிக்க பார்க்கும். தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு அதிகம் இருக்கும்,. இலங்கை நட்பு நாடாக மாறும் என்பது உட்பட பல்வேறு சம்பவங்கள் நடக்கப் போவது குறித்து தன்னுள் தான் கண்ட காட்சிகளை குறித்துள்ளார். இதுகுறித்து தங்கமணி குருசாமி கூறுகையில், முதலில் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்தி விடுகிறேன். எனக்கு ஆண்டுக்கு ஒரு முறை ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இறைவன் அருளால் அந்த ஆண்டில் நடப்பவை பற்றி முன்கூட்டியே தெரிந்து அதை அப்படியே எழுதி வைத்து கொள்கிறேன்.

இதனால் நான் அருள்வாக்கு கூறுவதாக எண்ணி யாரும் வந்துவிட வேண்டாம். நானும் உங்களில் ஒருவன்தான். சாதாரணமானவன். அந்த ஒருநாளில் இறைவனின் அருளால் இவ்வாறு எனக்கு தோன்றுகிறது. எனவே யாரும் என்னை அருள்வாக்கு கூறுபவராக நினைக்க வேண்டாம். மக்களின் நலன் உயர்வடைய வேண்டும் என்பதுதான் எனது வேண்டுதல். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இவர் தர்ம ரட்ஷன சமிதியில் மாவட்ட துணைத்தலைவராகவும் செயல்படுகிறார். ஐயப்ப தர்ம சேவா சங்கத்தில் மாநில அமைப்பு செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு இவருக்கு மனதில் தோன்றிய நிகழ்வில் எழுதி வைத்த குறிப்பில் மிக முக்கியமானது ராமர் கோவில் கட்டப்படும் தேதி அறிவிக்கப்படும் என்பதுதான். அதற்கேற்ப தீர்ப்பும் வந்து ராமர் கோவில் கட்டப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.