திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு வாய்ப்பு

திருப்பதி: தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு வாய்ப்பு... திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தமிழகத்தைச் சேர்ந்த மூவருக்கு ஆந்திர மாநில அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழுத் தலைவராக ஏற்கனவே கருணாகர ரெட்டி நியமிக்கப்பட்டு பதவி ஏற்றுள்ளார். மீதமுள்ள உறுப்பினர்களை நியமிப்பதற்கான பரிசீலனை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஆந்திர மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் 24 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதில் தமிழகத்தில் திருப்பூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம், சென்னையைச் சேர்ந்த டாக்டர் எஸ். சங்கர், கிருஷ்ணமூர்த்தி வைத்தியநாதன் ஆகிய மூவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதில் கிருஷ்ணமூர்த்தி வைத்தியநாதன், மத்திய அமைச்சர் அமித்ஷா தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக அறங்காவலர் குழு உறுப்பினராக பதவி ஏற்க உள்ளார்.

டாக்டர் சங்கர், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தரப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இரண்டாவது முறையாக தொடர்ந்து பதவி ஏற்க உள்ளார். திருப்பூர் பாலசுப்ரமணியம் தமிழக அரசு தரப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.