பழனி முருகன் கோயிலில் தொலைபேசி வாயிலாக அர்ச்சனையா ? கோயில் நிர்வாகம் விளக்கம்

சென்னை: அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக போற்றப்படுவது பழனி முருகன் கோயில். தரை மட்டத்திலிருந்து சுமார் 960 அடி உயரத்தில் எழுந்தருளியுள்ள முருகன் தண்டாயுத பாணியை பார்க்க தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமாக பக்தர்கள் வருகை தருவர்.

இதனை அடுத்து சுமார் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்த்திரம், சூரசம்ஹாரம் விழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த நிலையில் அண்மையில் வாட்ஸ் அப்பில், பழனி முருகன் கோயிலில் தொலைபேசி வாயிலாக அர்ச்சனை செய்யப்படும் என தகவல் ஒன்று வெளியானது.

ஆடி கிருத்திகையன்று 1 கோடி பேருக்கு அர்ச்சனை எனக்கூறி மோசடி கும்பல் ஒன்று பணம்பறிக்கும் செயலில் ஈடுபட்டு உள்ளது. ஆடி கிருத்திகை அன்று பழனி முருகன் கோயிலில் அர்ச்சனை செய்வதற்கு தொலைபேசி வாயிலாக பதிவு செய்யலாம் என வாட்ஸ்அப் வழியே தகவலை வெளியிட்டு ஏமாற்றுவது கோயில் நிர்வாகத்துக்கு தெரிய வந்து உள்ளது.

இதனையடுத்து இது குறித்து விளக்கம் அளித்து உள்ள கோயில் நிர்வாகம், பழனி முருகன் கோயிலில் தொலைபேசி வாயிலாக அர்ச்சனை செய்யப்படவில்லை எனவும், பொய்யான தகவலை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு கோயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.