வினைகளை தீர்க்கும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயம்

சென்னை: ஓம்” எனும் பிரணவ மந்திரத்தின் வடிவத்தை கொண்டவர் விநாயகப்பெருமான். நமது நாட்டில் மிக பழமையான காலம் தொட்டே விநாயகர் வழிபாடு முறை இருந்து வருகிறது. நமது வினைகள் அனைத்தையும் விலக்குபவர் விநாயகர்.

அப்படி வேண்டும் பக்தர்களின் அனைத்து வினைகளையும் தீர்க்கும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தின் சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம். சுமார் 1600 ஆண்டுகள் பழமையான இக்கோவில் ஒரு “குடைவரை” கோவிலாகும். இந்த வகை கோவில்களைக் கட்டுவதில் சிறந்தவர்களாக விளங்கியவர்கள் “பல்லவ” மன்னர்கள். அவர்கள் வழி வந்த மகேந்திர வர்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்டதே இந்தக் கோவில் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இக்கோவிலின் மூலவரான விநாயகர் “கற்பக விநாயகர்” என அழைக்கப்படுகிறார். தென்னிந்தியாவில் “அர்ஜுன வன திருத்தலங்கள்” நான்கு இருக்கிறது. அதில் தமிழ் நாட்டில் மூன்றும், ஆந்திர மாநிலத்தில் ஒன்றும் இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் மூன்றில் “பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலும்” ஒன்று. கல்வெட்டுக்களை நோக்கினால் இந்தக் கோவிலின் வரலாறு தெரியவரும். அதாவது இதன் பழமை என்ன என்பது உள்ளிட்ட தகவல்கள் இந்தக் கோவிலின் கல்வெட்டுக்களில் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது.


தலச் சிறப்பு முருகனுக்குத் தான் ஆறு படை வீடுகள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். விநாயகருக்கும் ஆறு படைவீடுகள் இருக்கின்றன. அதில் இந்த பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயம் விநாயகரின் “ஐந்தாம்” படை வீடாகக் கருதப்படுகிறது. விநாயகருக்குத் தேர்த்திருவிழா நடக்கும் ஒரு சில கோவில்களில் இதுவும் ஒன்று. அப்பொழுது விநாயகருக்கும், சண்டிகேஸ்வரருக்கும் தேர்கள் இழுக்கப்படுகின்றன.


பிள்ளையாருக்கான தேரை இழுக்கும் போது, தேரின் ஒரு வடத்தை ஆண்களும் மற்றொரு வடத்தை பெண்களும் பிடித்து தேரை இழுக்கின்றனர். சண்டிகேஸ்வரரின் தேரை பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே இழுக்கின்றனர். இக்காலத்தில் கோவிலில் 9 நாட்களுக்கு விழா நடத்தப்படுகிறது. ஒன்பது நாள் விழாவின் இறுதி நாளில் பிள்ளையாருக்கு “80 கிலோ சந்தனக்காப்பு” சாற்றப்படுகிறது. ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே செய்யப்படும் இந்த அலங்காரக் காட்சியைக் காண்பதற்காகவே பக்தர்கள் பெருமளவில் இக்கோவிலுக்கு வருகை தருகின்றனர்.

பிள்ளையார்பட்டி கோவிலின் சிறப்பாக, விநாயகர் சதுர்த்தி தினத்தன்று முக்குறுணி அரிசியைக் கொண்டு தயாரிக்கப்படும் மிகப்பெரிய “கொழுக்கட்டை” விநாயகருக்குப் படைக்கப்பட்டுப் பூஜைகள் செய்யப்பட்ட பின்பு, அக்கொழுக்கட்டை ஊரார்களுக்கும், பக்தர்களுக்கும் அருட்பிரசாதமாக வழங்கப்படுகிறது. கல்விகளில் மேன்மை பெற, வறுமை நிலை மாற, குழந்தை பாக்கியம் பெறுவதற்காகப் பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.