திருச்செந்தூர் கோயிலில் இன்று சூரசம்ஹார விழா; பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

இன்று சூரசம்ஹார விழா... திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 15-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

விழாவில் 6-ம் நாளான இன்று மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. இன்று அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையைத் தொடர்ந்து பூர்ணாஹுதி தீபாராதனை, சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

அதன்பின்னர், யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்கச்சப்பரத்தில் கோயில் பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

அங்கிருந்து தங்கச்சப்பரத்தில் மாலையில் திருவாவடுதுறை ஆதீன மண்டபத்துக்கு சுவாமி எழுந்தருள்கிறார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹாரத்துக்காக கோயில் அருகேயுள்ள கடற்கரைக்கு சுவாமி எழுந்தருள்கிறார்.

வழக்கமாக சூரசம்ஹாரத்தைக் காண பல லட்சம் பக்தர்கள் கடற்கரையில் குவிவார்கள். கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதியில்லை. அத்துடன், கடற்கரையில் வழக்கமான இடத்துக்கு பதில், கோயிலுக்கு அருகிலேயே கடற்கரையில் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட எஸ்பி ஜெயகுமார் தலைமையில், திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ்சிங் மேற்பார்வையில் 2 ஆயிரம் போலீஸார் திருச்செந்தூர் நகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.