திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தில் சுவாமி வீதியுலா ரத்து

திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவத்தை கோயிலுக்குள் ஏகாந்தமாக நடத்துவது என தீர்மானித்தோம். ஆதலால் இம்முறையும் மாடவீதிகளில் சுவாமியின் திருவீதி உலா ரத்து செய்யப்படுகிறது என்று தேவஸ்தானத்தின் புதிய தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் நடைபெற்றது. கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதத்தில் இவ்விழா திருவீதி உலா இன்றி கோயிலுக்குள் ஏகாந்தமாக வாகன சேவை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், நவராத்திரி பிரம்மோற்சவம் வரும் 16-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் சுமார் 25 ஆயிரம் பக்தர்களை மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிப்பது என்றும் மாட வீதிகளில் வாகன சேவை நடத்துவது என்றும் கடந்த 1-ம் தேதி முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஜவஹர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''பக்தர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டும் மத்திய அரசின் புதிய நிபந்தனைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் நவராத்திரி பிரம்மோற்சவத்தை கடந்த பிரம்மோற்சவம் போன்று கோயிலுக்குள் ஏகாந்தமாக நடத்துவது என தீர்மானித்தோம். ஆதலால், இம்முறையும் மாடவீதிகளில் சுவாமியின் திருவீதி உலா ரத்து செய்யப்படுகிறது. கோயிலுக்குள் வாகன சேவைகள் ஏகாந்தமாக நடத்தப்படும்'' என்றார்.