திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் திருத்தேரோட்டம்

தஞ்சாவூர்: தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் ஐயாறப்பா் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி, பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்த திருத்தேரோட்டம் நடைபெற்றது.

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், 9-ம் திருநாளான வெள்ளிக்கிழமை திருத்தேரோட்ட விழா நடைபெற்றது.

திருத்தேரில் அறம்வளா்த்த நாயகி எழுந்தருளியதைத் தொடர்ந்து ஏராளமான பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு வீதிகளிலும் இத்தேர் வலம் வந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா இன்று சனிக்கிழமை பிராயசித்தாபிஷேகத்துடன் நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதினம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த பரமாச்சாரிய சுவாமிகள் அறிவுறுத்தலின் பேரில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.