அடுத்த ஆண்டுதான் வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடக்கும்

அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம்... மிகவும் பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வடபழனி முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்கி வருகிறது. இக்கோயிலுக்கு சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம்.

இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி மார்ச் 12-ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, திருப்பணிகள் தொடங்கப்பட்டன. நடப்பு ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தச் சூழலில், கரோனா தொற்று காரணமாக மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கோயில்கள் திறக்கப்படவில்லை. எனவே வடபழனி முருகன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால், நடப்பு ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, வடபழனி முருகன் கோயிலில் அடுத்த ஆண்டுதான் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வடபழனி முருகன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி கிடைக்காததால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. திருப்பணிகளை மீண்டும் தொடங்கினால் 4 முதல் 5 மாதங்களில் பணிகள் முடிக்கப்படும். எனவே, தற்போதைய சூழலில் வடபழனி முருகன் கோயிலில் நடப்பு ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெறுவது சந்தேகம்தான். இருப்பினும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கும்பாபிஷேகம் நடைபெற வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.