அட்சய திருதி .. தமிழகத்தில் இந்தாண்டு 20 டன் நகைகள் விற்பனை

சென்னை: சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு அடுத்து வரும் வளர்பிறை திருதியை, அட்சய திருதியாக கொண்டாடப்படுகிறது. மேலும் லட்சுமி கடாட்சம் நிறைந்த இந்த நன்னாளில் தங்கம், வெள்ளி, வீடு, வீட்டு மனைகள் வாங்கினால மேலும் சேமிப்பு உயரும் என்ற கூற்றின்படி பொதுமக்கள், அட்சய திருதியை ஒட்டி தங்க நகைகளை வாங்க நகை கடைகளில் திரண்டனர்.

எனவே இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நகைக்கடைகள் விடிய விடிய திறந்திருந்தன. மேலும் முன்பதிவு, தள்ளுபடி என்று பல சலுகைகளை அறிவித்தன. இன்னும் பல பகுதிகளில் நகைக்கடைகள் காலை 7 மணிக்கே திறந்திருந்தனர்.

அட்சய திருதியை நாளில் ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்கினால் அந்தாண்டு முழுவதும் சேமிப்பு அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள், இன்று தங்களுக்கு பிடித்த நகைகளை வாங்கிச் சென்றனர். பொதுவாக அட்சய திருதியை அன்று தங்கம் விலை அதிகரிப்பது என்பது வழக்கம். ஆனால் அன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ரூ.44,840க்கு விற்பனையானது. இதனால், விற்பனை கடந்த ஆண்டை காட்டிலும் 25 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக நகைக்கடை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து கடந்தாண்டு அட்சய திருதியை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பில் 18 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு 20 டன் அளவுக்கு நகைகள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மொத்த மதிப்பு ரூ.11 ஆயிரம் கோடியாகும்.