வரி விவகாரத்தில் முடிவு எடுக்க 2 வாரம் கால அவகாசம் கேட்ட மத்திய அரசு

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன், சில ஆண்டுகளுக்கு முன்பு, ஹட்சிசன் என்ற மற்றொரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பங்குகளை 1,100 கோடி டாலருக்கு விலைக்கு வாங்கியது. இதற்காக, ரூ.22 ஆயிரத்து 100 கோடி வரி செலுத்த வேண்டும் என்று வோடபோனுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில் வோடபோன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வோடபோன் செயலுக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. இதற்கிடையே, சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில் வோடபோனுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறதா? அல்லது எதிர்ப்பு தெரிவிக்கிறதா? என்று கடந்த மாதம் 7-ந் தேதி டெல்லி ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது. இந்த நிலையில், நேற்று நீதிபதிகள் ராஜீவ் சஹாய் எண்ட்லா, ஆஷா மேனன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மா, மத்திய அரசின் அதிகார குழு இன்னும் கூடாததால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆகவே, முடிவு எடுக்க 2 வாரம் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதை ஏற்ற நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 8-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.