தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் பருத்தி ஏலம் நடந்தது

தஞ்சாவூர்: வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்கு உட்பட்ட, தஞ்சாவூர் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 376 விவசாயிகள் தங்களது பருத்தியினை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்த நிலையில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட வணிகர்கள், ஆந்திர மாநில வணிகர்கள் என மொத்தம் 10 வணிகர்கள் இந்த மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டனர்.

விற்பனைக்குழு செயலாளர் சரசு விவசாயிகளிடம் பருத்தியினை நன்கு உலர வைத்து ஈரப்பதமின்றி விற்பனைக்கு கொண்டு வருவதற்கு கேட்டுக் கொண்டார்.

இந்த ஏலத்தில் 65 மெ.டன் அளவுள்ள ரூ.44 இலட்சம் மதிப்புள்ள பருத்தியானது வணிகர்களால் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயிணி, விளம்பரம் மற்றும் பிரசார கண்காணிப்பாளர் சித்தார்த்தன், உதவி பொறியாளர் அன்பரசு உட்பட அலுவலர்கள் ஏலம் தொடர்பான பணிகளை மேற்கொண்டனர்.