இங்கிலாந்தில் ஊரடங்கில் தளர்வுகள்: தொழில் நிறுவனங்கள் இயக்கத்தை தொடங்கின

இயக்கத்துக்கு வரும் தொழில்கள்... இங்கிலாந்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த தொழில் செயல்பாடுகள் படிப்படியாக இயக்கத்துக்கு வர தொடங்கியுள்ளது. மேலும் பங்குச் சந்தை வர்த்தகத்தில் இருந்து தற்காலிகமாக விலகி இருந்த நிறுவனங்கள் மீண்டும் வர்த்தகத்தில் பங்கேற்க தொடங்கியுள்ளன என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா தொற்று தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பெரும்பாலான நாடுகள் மார்ச் மாதத்தில் அதன் எல்லைகளை மூடின. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக செயல்பாடுகள் முடங்கின.

உற்பத்தி நிறுவனங்கள், அலுவலகங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், சுற்றுலாத் தளங்கள் என அனைத்து விதமான தொழில் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டது.

இங்கிலாந்தில் ஐந்தில் ஒரு நிறுவனம் அதன் பங்குச் சந்தை வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்து வைத்தது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுபாடு தளர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து அன்றாட தொழில் செயல்பாடுகள் தொடங்கப்பட்டு மீண்டும் பங்குச் சந்தை வர்த்தகத்தில் பங்கேற்று வருகின்றன.

தற்போது 80 சதவீத நிறுவனங்கள் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த இரண்டு வாரத்தில் ஐந்து சதவீத நிறுவனங்கள் மீண்டும் வர்த்தகத்தில் இணைந்தன. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மேலும் 5 சதவீத நிறுவனங்கள் மீண்டும் வர்த்தகத்தில் பங்கேற்க உள்ளன.

உற்பத்தி துறை மற்றும் கட்டுமானத் துறையில் வேலை செய்யும் பணியாளர்கள் வேலைக்குத் திரும்ப இங்கிலாந்து அரசு கடந்த மாதம் வலியுறுத்தியது. அடுத்த வாரம் முதல் அத்தியாவசியமல்லாத கடைகளும் திறக்கப்பட உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.