கப்பலில் கச்சா எண்ணெய்யை சேமித்து வைக்க மத்திய அரசு முடிவு

புதுடில்லி: நாடு முழுக்க டேங்க்குகள், சேமிப்பு கிடங்குகளில் கச்சா எண்ணெய் நிரம்பி வழிவதால், கப்பல்களில் கச்சா எண்ணெய்யை சேமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

உலகம் முழுக்க ஊரடங்கால் பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைந்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை 60 சதவீதத்துக்கும் மேலாக சரிவைக் கண்டது.

அமெரிக்க கச்சா எண்ணெய் விலை ஜீரோ டாலருக்கு கீழே போனது. ரஷ்யாவும், சவுதி அரேபியாவும் போட்டிபோட்டு கச்சா எண்ணெயை உற்பத்தி செய்ததும் ஒரு காரணம். இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதம் இறக்குமதி மூலமே பூர்த்தியாகிறது.

ஊரடங்கால் 70 சதவீத கச்சா எண்ணெய் தேவை குறைந்துள்ளது. நாடு முழுக்க உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் உள்ள டேங்க்குகள், பைப்லைன்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இரண்டரை கோடி டன் கச்சா எண்ணெயை கையிருப்பு வைக்க முடியும்.

தற்போது எல்லாம் நிரம்பி விட்டதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். அரசு மற்றும் தனியார் சுத்திகரிப்பு ஆலைகளில் மட்டும் 70 லட்சம் டன் கச்சா எண்ணெய் உள்ளது. இது, 5 கோடி பேரல்களுக்கு சமம். நாடு முழுக்க டேங்க்குகள், சேமிப்பு கிடங்குகளில் கச்சா எண்ணெய் நிரம்பி வழிவதால், கப்பல்களில் கச்சா எண்ணெய்யை சேமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கச்சா எண்ணெய்யின் தேவை இதுபோல எப்போதுமே குறைந்ததில்லை. கப்பல்களில் அரசு கச்சா எண்ணெய்யை சேமித்து வைப்பதும் வழக்கத்துக்கு மாறானது என்று, எண்ணெய் சந்தை வல்லுநர் செந்தில்முருகன் கூறினார்.