ரியல்மி நிறுவனத்தின் புதிய கியூ2 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியீடு

ரியல்மி கியூ2 ஸ்மார்ட்போன் விவரங்கள் பிஐஎஸ் வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது. இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் RMX2117 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது. பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருப்பதால், விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி கியூ2 ப்ரோ மாடலுடன் அக்டோபர் மாதத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி ரியல்மி கியூ2 ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

மேலும் இதில் புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. சீன சந்தையில் ரியல்மி கியூ2 மாடல் விலை 1299 RMB இந்திய மதிப்பில் ரூ. 14 ஆயிரத்தில் துவங்குகிறது. இதன் வெளியீட்டு தேதி விரைவில் வெளியாகலாம்.