அமேசான் தளத்தில் எக்சேன்ஜ் முறையில் புதிய மொபைல் போன் ஆர்டர் செய்தவருக்கு கிடைத்தது என்ன தெரியுமா ?

அமேசான் தளத்தில் நவராத்திரி சிறப்பு விற்பனை சமீபத்தில் நடைபெற்றது. இந்த விற்பனை அதிரடி சலுகைகளை வழங்கியது. இந்நிலையில், ஷாப்பிங் செய்த பலர் மகிழ்ச்சியுற்ற போதும், சிலருக்கு ஆன்லைன் ஷாப்பிங் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், ஷாப்பிங் செய்த சிலருக்கு தாங்கள் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக வேறு பொருட்கள் வந்துள்ளன.

டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் தனது பழைய மொபைல் போனை எக்சேன்ஜ் செய்து புதிதாக ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன் வாங்க அமேசான் தளத்தின் சிறப்பு விற்பனையில் ஆர்டர் செய்தார். அதன்படி அவரது பழைய மொபைல் போனை கொடுத்து புதிய போன் அடங்கிய பார்சலை டெலிவரி செய்த ஊழியரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

அதன்பின் தனது பார்சலை திறந்தவர் அதனுள் இருந்த ரின் சோப்பை கண்டு அதிர்ந்து போனார். தனக்கு ஏற்பட்ட நிலையை முதலில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இது பலரையும் ஆச்சர்யப்பட வைத்தது.

இந்நிலையில் இவரது ட்விட்டர் பதிவுக்கு பதில் அளித்த அமேசான், வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட பிரச்சினையை 4 முதல் 5 நாட்களுக்குள் தீர்வு செய்து தருவதாக வாக்குறுதி அளித்துள்ளது. அதன்படி விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டு விடும்.