ஒரு மணி நேரத்தில் 54 ஆயிரம் டிக்கெட் விற்பனை; ரூ.9.9 கோடி வருமானம்

வெறும் 1 மணிநேரத்தில் 54,000 ரயில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுச் சுமார் 9.9 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை ஈட்டியது IRCTC நிறுவனம்.

கொரோனா பாதிப்பின் காரணமாகக் கடந்த 7 வாரங்களாகத் தொடர்ந்து நாடு முழுவதும் லாக்டவுன் விதிக்கப்பட்டு வரும் நிலையில், அனைத்துப் பொதுப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு நாட்டு மக்கள் வேறு இடத்திற்குப் பயணம் செய்ய முடியாமல் தவித்து வந்த நிலையில், மத்திய அரசு ரயில் போக்குவரத்து சேவையைப் பகுதி பகுதியாகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடிவு செய்தது.

இதன் படி ரயில் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு சேவை நேற்று மாலை துவக்கப்பட்டது. சொந்த ஊருக்கும், வேலை செய்யும் ஊருக்குச் செல்ல நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் மக்கள் டிக்கெட் முன்பதிவு சேவை துவங்கிய அடுத்தச் சில நிமிடங்களில் மொத்த டிக்கெட்களையும் வாங்கிவிட்டனர்.

திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு டிக்கெட் முன்பதிவு துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2 மணிநேரம் தாமதம் ஆனது. இதனால் 8 மணிக்குத் துவங்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு வெறும் 1 மணிநேரத்தில் அதாவது 9 மணிக்கு 54,000 ரயில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுச் சுமார் 9.9 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை ஈட்டியது IRCTC நிறுவனம்.

மேலும் 9.15 மணிக்குள் 30,000 பயணிகளுக்கு PNR கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதிகப்படியான மக்கள் முன்பதிவிற்காகக் காத்திருந்த காரணத்தால் தான் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது என IRCTC நிறுவனம் தெரிவித்துள்ளது.

Howrah-New Delhi, Bhubaneswar-New Delhi, Mumbai-Delhi வழித்தடத்தில் இயங்கும் ரயில்களின் டிக்கெட்கள் முன்பதிவு துவங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே மொத்தமும் விற்பனை ஆனது. இதனால் மே 12-17 வரையில் இவ்வழித்தட ரயில் டிக்கெட்கள் அனைத்தும் விற்பனை ஆனது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை முதல் டெல்லியில் இருந்து திபுருகார், பெங்களூரு, பிலாஸ்பூர் ஆகிய ஊர்களுக்கு 8 ரயில்கள் இயக்குப்படுகிறது. மீதமுள்ள 7 ரயில்கள் ஹவுரா, பாட்னா, பெங்களூரு, மும்பை, அகமதாபாத் ஊர்களில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படுகிறது.

இவை அனைத்தும் ஏசி கோச் கொண்ட ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.