அன்டர் டிஸ்ப்ளே செல்பி கேமரா தொழில்நுட்பத்துடன் கூகுள் பிக்சல் 6 ஸ்மார்ட்போன்

கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 6 ஸ்மார்ட்போன் 2021 ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த பிக்சல் 5 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய பிக்சல் ஸ்மார்ட்போனின் விவரங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் பிக்சல் 6 ஸ்மார்ட்போன் அன்டர்-ஸ்கிரீன் செல்பி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

புதிய அன்டர் டிஸ்ப்ளே செல்பி கேமரா தொழில்நுட்பம் எவ்வாறு இயங்கும் என்பது பற்றிய விவரங்கள் தற்சமயம் வெளியாகி இருக்கும் காப்புரிமையில் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது. எனினும், இந்த அம்சம் வெளியீட்டு தயார் நிலையில், சீராக இயங்குவதாக கூறப்படுகிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய கூகுள் பிக்சல் 6 ஸ்மார்ட்போன் 6.0 இன்ச் FHD+ 1080x2340 பிக்சல் OLED ஸ்கிரீன், ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 4080 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என தெரிகிறது. அன்டர்-டிஸ்ப்ளே செல்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை இசட்.டி.இ. நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்து இருக்கிறது.

மேலும் சியோமி மற்றும் ஒப்போ போன்ற நிறுவனங்கள் இதே தொழில்நுட்பம் கொண்ட மாடல்களின் ப்ரோடோடைப்களை வெளியிட்டு இருக்கின்றன. மேலும் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகமாக இருக்கும் கேலக்ஸி இசட் போல்டு 3 ஸ்மார்ட்போனிலும் அன்டர்-டிஸ்ப்ளே செல்பி கேமரா வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.