கடந்த மாதம் வரையிலான ஜி.எஸ்.டி. வசூல் நிலவரம்

இந்தியா: ஜி.எஸ்.டி. வசூல் நிலவரம் ... நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி அமைப்பு, வரி விகிதத்தை செயல்படுத்தும் நோக்கில் 2017 ஜூலை மாதத்தில் சரக்குகள் மற்றும் சேவைகள் (ஜி.எஸ்.டி.) வரியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. பொதுவாக ஜி.எஸ்.டி. வாயிலாக, மாதந்தோறும் சராசரியாக ரூ.1 லட்சம் கோடி வருவாய் அரசுக்கு வந்து கொண்டு இருக்கிறது.

இதனை அடுத்து 2020-21ம் நிதியாண்டில் ஜி.எஸ்.டி. வாயிலாக ரூ.11.36 லட்சம் கோடி (தோராயமாக) வசூலாகி இருந்தது. கடந்த நிதியாண்டில் (2021 ஏப்ரல்-2022 மார்ச்) ஜி.எஸ்.டி. வாயிலாக ரூ.14.87 லட்சம் கோடி (தோராயமாக) வசூலாகி இருந்தது.

இந்த நிலையில், ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்தது முதல் இதுவரையிலான காலத்தில் 10வது முறையாக மற்றும் தொடர்ந்து 9வது மாதமாகவே கடந்த நவம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.40 லட்சம் கோடியை கடந்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வருவாயாக ரூ.1,45,867 கோடி வசூலாகி இருந்தது. 2022 ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜி.எஸ்.டி. வருவாயாக ரூ.1,67,540 கோடி வசூலாகி இருந்தது.

இதையடுத்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த நவம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வருவாயாக ரூ.1,45,867 கோடி வசூலாகியுள்ளது. இது 2021 நவம்பர் மாதத்தை காட்டிலும் 11 சதவீதம் அதிகமாகும். கடந்த அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வருவாயாக ரூ.1,51,718 கோடி வசூலாகி இருந்தது. கடந்த நவம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூலில், மத்திய ஜி.எஸ்.டி. வரி ரூ.25,681 கோடியும், மாநில ஜி.எஸ்.டி. வரி ரூ.32,651 கோடியும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வரி ரூ.77,103 கோடியும் (இறக்குமதி பொருட்கள் மீதான வரி வசூல் ரூ.38,635 கோடி உள்பட), செஸ் ரூ.10,433 கோடியும் (இறக்குமதி பொருட்கள் மீதான வரி வசூல் ரூ.817 கோடி உள்பட) அடங்கும். இந்நிதியாண்டில் கடந்த நவம்பர் வரையிலான 8 மாதங்களில் ஜி..எஸ்.டி. வசூல் ரூ.12 லட்சம் கோடியை நெருங்கி உள்ளது.