ஸ்மார்ட்போன் இல்லை என்றாலும் ஆரோக்யசேது செயலி சேவையை பயன்படுத்த முடியும்

இனி ஸ்மார்ட்போன் இல்லாதவர்களும் ஆரோக்யசேது சேவையை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக ஆரோக்யசேது செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த செயலியின் சேவையை ஃபீச்சர் போன் மற்றும் லேண்ட்லைன் இணைப்புகளிலும் வழங்க ஏதுவாக ஆரோக்யசேது ஐவிஆர்எஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இந்த சேவை துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த சேவையை பயன்படுத்த நாடு முழுக்க பொது மக்கள் தங்களது மொபைல் நம்பரில் இருந்து 1921 எனும் எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்ததும், அரசு சார்பில் மிஸ்டு கால் கொடுத்தவரின் எண்ணிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவரது ஆரோக்கியம் சார்ந்த விவரங்கள் கேட்கப்படும்.

இவற்றுக்கு குடிமக்கள் அளிக்கும் பதில்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி முடிவு எட்டப்படுகிறது. இதுதவிர பொதுமக்கள் ஆரோக்கியம் சார்ந்த விவரங்கள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படுகிறது. இதுவரை ஆரோக்யசேது செயலியை நாடு முழுக்க சுமார் ஒன்பது கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோட் செய்துள்ளனர்.

முன்னதாக இந்த செயலியில் தனிநபர் தகவல்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இணைய பாதுகாப்பு நிபுணர் ஆல்டர்சன் என்பவர் கூறியிருந்தார். இவரது குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு விளக்கம் அளிக்கப்பட்டது.

அதன்படி, எந்த தனிநபரின் தகவலாவது அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக ஆல்டர்சன் நிரூபிக்கவில்லை. ஆரோக்யசேது செயலி அடிக்கடி பரிசோதிக்கப்பட்டு, தரம் உயர்த்தப்படுகிறது. செயலியில், எந்த தகவல் திருட்டோ, பாதுகாப்பு குளறுபடியோ நடந்ததாக நிரூபிக்கப்படவில்லை.

பயனாளரின் இருப்பிடம் குறித்த தகவல் பற்றி அச்சம் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இருப்பிட தகவல், பாதுகாப்பாக சர்வரில் சேமித்து வைக்கப்படுகிறது. எந்த பயனாளராவது, தகவல் திருட்டை உணர்ந்தால், தகவல் தெரிவிக்கலாம். என மத்திய அரசு கூறியுள்ளது.