எக்குத்தப்பாக அதிகரித்துள்ள சின்ன வெங்காய விலை

சென்னை: வழக்கமாக பருவமழை காலங்களில் காய்கறிகளின் விளைச்சல் குறைவு மற்றும் உற்பத்தி பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களினால் காய்கறிகளின் தேவை அதிகரித்தும், இதன் காரணமாக விலைவாசி உயர்ந்தும் காணப்படும். அதிலும் கடந்த 2 மாதங்களாக தமிழகத்தை பொறுத்தவரை வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, பீன்ஸ் போன்ற பல்வேறு காய்கறிகளின் விலை ஆனது வரலாறு காணாத அளவிற்கு உச்சத்தை அடைந்தது.

இதனை அடுத்து தமிழகத்தில் தற்போது அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கோவை, திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி போன்ற பல்வேறு மாவட்டங்களில் சின்ன வெங்காயத்தின் சாகுபடி நடக்கிறது.

இங்கிருந்து மற்ற மாநிலங்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது . ஆனால் தமிழகம் மட்டும் இன்றி தற்போது அண்டை மாநிலங்களிலும் சின்ன வெங்காயத்தின் விளைச்சல் குறைவாகவுள்ளது.

எனவே இதன் காரணமாக மொத்த விற்பனையில் கடந்த வாரம் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தின் விலை தற்போது 100 ரூபாயாகவும், சில்லறை விற்பனையில் கிலோ ரூபாய் 130 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சின்ன வெங்காயத்தின் விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.