பேஸ்புக் மீது அமெரிக்க அரசு வழக்கு

அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு எச்1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த எச்1 பி விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க நிறுவனங்கள் தகுதி வாய்ந்த அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்காமல் குறைவான ஊதியத்தில் எச்1 பி விசாதாரர்களை பணியமர்த்தி வருவதாக ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இதனால் எச்1 பி விசா பெறுவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை டிரம்ப் நிர்வாகம் விதித்து வருகிறது. இந்நிலையில் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களை புறக்கணித்துவிட்டு வெளிநாட்டினருக்கு முன்னுரிமை அளிப்பதாக பேஸ்புக் நிறுவனத்தின் மீது அமெரிக்க அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

இதுகுறித்து டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், தகுதி வாய்ந்த அமெரிக்க தொழிலாளர்களுக்கு மாற்றாக எச் 1 பி விசா போன்ற தற்காலிக விசா வைத்திருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்காக பேஸ்புக் நிறுவனம் வேண்டுமென்றே ஒரு பணியமர்த்தல் முறையை உருவாக்கியது என்று தெரிவித்தார்.

மேலும் அவர், இது தொடர்பாக அமெரிக்க நீதித்துறை 2 ஆண்டுகள் நடத்திய விசாரணைக்கு பிறகு அந்த நிறுவனத்தின் மீது தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறினார். இந்த வழக்கில், ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த அமெரிக்க தொழிலாளர்களை கருத்தில் கொள்ளாமல் தற்காலிக விசா வைத்திருப்பவர்களுக்கு பதவிகளை ஒதுக்குவதன் மூலம் வேண்டுமென்றே மற்றும் பரவலாக சட்ட மீறல்களில் ஈடுபட்டதாக பேஸ்புக் நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.