அம்மன் கருவறை முன்பு நிற்கும் ரஜினிகாந்த் புகைப்படம் எழுப்பிய சர்ச்சை

திருவண்ணாமலை: அம்மன் கருவறை முன்பு நடிகர் ரஜினிகாந்த் தரிசனம் செய்வது புகைப்படமாக வெளியானது அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு இந்து முன்னணி அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள அம்மன் சன்னதி கருவறை முன்பு நடிகர் ரஜினிகாந்த் ஜுலை 1 ஆம் தேதி தரிசனம் செய்த புகைப்படம் வெளியாகியிருந்தது.

திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெற்று வந்த 'லால் சலாம்' படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார். அப்போது மூலவர் மற்றும் அம்மன் சன்னதியில் வழிபாடு செய்த அவருக்கு, சிவாச்சாரியார்கள் பிரசாதம் வழங்கினர்..

இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் உள்ள அம்மன் சன்னதியில் தரிசனம் செய்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு, சிவாச்சாரியார்கள் பிரசாதம் வழங்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. பொதுவாக மூலவர் மற்றும் அம்மன் கருவறை முன்பு புகைப்படம், வீடியோ எடுக்க அனுமதியில்லை என்பதால், சுவாமி கருவறை முன்பு கோயில் ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் இருப்பார்கள்.

அப்படியிருக்க அம்மன் கருவறை முன்பு நடிகர் ரஜினிகாந்த் தரிசனம் செய்வது புகைப்படமாக வெளியானது அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு இந்து முன்னணி அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட பொதுச் செயலாளர் இரா.அருண்குமார் கூறும்போது, 'கடவுள் முன்பு அனைவரும் சமம். யாராக இருந்தாலும், கருவறை முன்பு புகைப்படம் எடுக்க அனுமதியில்லை.

கருவறை முன்பு புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. புகைப்படம் எடுத்தவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்' என்றனர்