நடிகர் ராஜசேகர், ஜீவிதா தம்பதிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு

ஐதராபாத்: நட்சத்திர தம்பதி ஜீவிதா, ராஜசேகருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

1980களில் தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ஜீவிதா. ஜீவிதா, ராஜசேகர் இருவரும் திருமணமாகி ஹைதராபாத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடத்தி வரும் ரத்த வங்கி குறித்து பல ஆண்டுகளுக்கு முன் இருவரும் சர்ச்சைக்குரிய கருத்தை கூறினர்.

தானம் செய்யப்பட்ட ரத்தத்தை சிரஞ்சீவி வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்வதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து, சிரஞ்சீவியின் உறவினரும், தெலுங்கு தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த், ஜீவிதா, ராஜசேகர் மீது, 2011ல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

சேவை மனப்பான்மையுடன் இயங்கும் ரத்த வங்கி குறித்து, இருவரும் ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியதாக, மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை ஐதராபாத்தில் உள்ள நாம் பள்ளியில் 17வது கூடுதல் பெருநகர மாஜிஸ்திரேட் சாய் சுதா விசாரித்து ஜீவிதா, ராஜசேகர் ஆகியோருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். பின்னர் இருவரும் ஜாமீன் பெற்று நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பளித்தனர்.