முதல்முறையாக சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ராமராஜன்

சென்னை: முதல்முறையாக பிரபல டிவியின் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக ராமராஜன் கலந்து கொண்டுள்ளார்.

நடிகர் ராமராஜனின் பல படங்கள் மிகப்பிரபலமானவை. 'எங்க ஊரு பாட்டுக்காரன்', 'கரகாட்டக்காரன்', 'தங்கமான ராசா', 'எங்க ஊரு காவல்காரன்', 'அம்மன் கோவில் வாசலிலே' உள்ளிட்ட படங்கள் அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தன.

அதிலும் இவர் நடித்த 'கரகாட்டக்காரன்' திரைப்படம் மதுரையில் ஒரு திரையரங்கில் ஒரு வருடம் ஓடி சாதனைப் படைத்தது.

1999 வரை நிறைய படங்கள் நடித்து வந்த நடிகர் ராமராஜன் அதன்பின் ஒரு சில படங்களில் நடித்த நிலையில், தற்போது பத்து வருடங்களுக்குப்பின் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்து, 'சாமானியன்' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தை இயக்குநர் R.ராகேஷ் இயக்கியுள்ளார். ராமராஜனுடன் முக்கிய வேடங்களில் நடிகர் ராதாரவி, எம்.எஸ் பாஸ்கர், கே.எஸ்.ரவிக்குமார், சரவணன் சுப்பையா, லியோ சிவா, நக்ஷா சரண், ஸ்மிருதி வெங்கட், அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் ராமராஜன் முதல் முறையாக சின்னத்திரைக்கு வந்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் நடத்தப்படும் KPY Champions-4 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராமராஜன் கலந்து கொண்டுள்ளார்.

இதுவரை வெள்ளித்திரையில் பார்த்துவந்த மக்கள் நாயகனை சின்னத்திரை நிகழ்ச்சியில் முதல்முறையாக பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். பல ரசிகர்களும் 'மக்கள் நாயகன்' குறித்த தங்கள் சந்தோஷப் பதிவுகளை கமெண்ட்ஸ்களாக பதிவிட்டு வருகின்றனர்.