காய்கறி வியாபாரம் செய்த சாப்ட்வேர் பொறியாளருக்கு வேலை வழங்கிய நடிகர் சோனு சூட்!

இந்தி நடிகர் சோனு சூட் தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பதற்காக ஊரடங்கு போடப்பட்ட நிலையில், பிற மாநிலங்களில் தவித்து வந்த இடம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து மகத்தான சேவை செய்து, நாடு முழுவதும் பிரபலமாகி வருகிறார்.

அந்த வகையில் இவர் கடந்த மாதம் கேரளாவில் ஜவுளி ஆலையில் வேலை பார்த்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 147 பெண்கள், 20 ஆண்கள் என 167 இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு போக இயலாமல் தவித்துக்கொண்டிருப்பதை டுவிட்டர் மூலம் தெரிந்து கொண்டார். அவர்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தார். அவர் ஏர் ஏசியா விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு ஒரு தனி விமானத்தை ஏற்பாடு செய்து அவர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்தார்.

இதையடுத்து தங்களுக்கு உதவி செய்த நடிகர் சோனு சூட்டுக்கு தொழிலாளர்கள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர். இவர் ஒடிசா, பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தார். தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களையும் அவர் தன்னுடைய சொந்த செலவில் அவர்களது ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் ஏழை தொழிலாளி ஒருவர் பால் கறந்து தனது பிழைப்புக்காக வைத்திருந்த பசுமாட்டை விற்று குழந்தைகள் படிப்புக்காக ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்தார். இது பற்றிய தகவல் சமூக ஊடகங்களில் வெளியானதை பார்த்த நடிகர் சோனு சூட் அவருக்கு உதவும் பசுமாட்டை மீட்டு கொடுக்கவும் முன்வந்தார். இதையடுத்து அவருக்கு முகவரி உள்ளிட்ட தகவல்கள் அனுப்பப்பட்டன. அந்த ஏழை குடும்பத்துக்கு சோனு சூட் உதவி செய்தார். மேலும், சமீபத்தில் ஆந்திராவில் மகள்களை வைத்து ஏர் உழுத விவசாயிக்கு டிராக்டரை அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் லாக் டவுனால் வேலையிழந்து காய்கறி வியாபாரம் செய்து வந்த சாப்ட்வேர் பொறியாளர் சாரதா என்ற பெண்ணுக்கு வேலை வழங்கியுள்ளார். இது குறித்து டுவீட் செய்துள்ள அவர், எங்களது அதிகாரிகள் அவரை சந்தித்தனர். நேர்காணல் முடிந்து வேலைக்கான கடிதம் அனுப்பப்பட்டு விட்டது. ஜெய்ஹிந்த் எனத் தெரிவித்துள்ளார்.