சொன்னதையும் தாண்டி செய்து அசத்தினார் நடிகர் சோனுசூட்

உழவு மாடுகள் வாங்கித்தருவதாக காலையில் போட்ட டுவிட்டை தாண்டி விவசாயிக்கு டிராக்டர் வாங்கி தந்து அசத்தி உள்ளார் நடிகர் சோனுசூட்.

ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் மஹால்ராஜூவாரிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாகேஸ்வர ராவ் டீக்கடை நடத்தி வந்தார். ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தொழில் நசிந்து போனது.

அதனால் அவர் டீக்கடையை விட்டுவிட்டு விவசாயத்தில் களமிறங்கினார். தனது சொந்த கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை பயிரிட திட்டமிட்டார்.

ஆனால் விவசாய நிலத்தை உழவு செய்ய முடியாமல் தவித்தார். உழவு மாடுகள் வாங்க பணமில்லாததால் தன் இரு மகள்களை ஏரில் பூட்டி நிலத்தில் உழவு செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதை பார்த்த இந்தி நடிகர் சோனு சூட் மனவருத்தம் அடைந்து அவருக்கு உதவி செய்ய முன்வந்தார். இதுதொடர்பாக சோனு சூட் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், வயலில் உழவு செய்வதற்கு விவசாயிக்கு இரு உழவுமாடுகளை தானமாக அளிக்க உள்ளேன். தந்தைக்கு உதவி செய்த பெண்களை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், மாடுகளுக்கு பதிலாக ஆந்திர விவசாயிக்கு டிராக்டர் வாங்கி தந்துள்ளார் நடிகர் சோனுசூட். நேற்று காலையில் நடிகர் சோனு சூட் ட்விட்டரில் பதிவிட்ட நிலையில், நேற்று மாலை விவசாயியிடம் அந்த டிராக்டர் ஒப்படைக்கப்பட்டது. இதையறிந்த பலரும் நடிகர் சோனுசூட்டுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.