தக்காளி சாப்பிடுவதை குறைத்த நடிகர் சுனில் ஷெட்டி

மும்பை: நடிகர் சுனில் ஷெட்டி, விலை உயர்வால் தக்காளி சாப்பிடுவதை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தக்காளி விலை உயர்வால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தக்காளி விலையை குறைக்க பல தரப்பில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழில் 12பி, தர்பார் படங்களில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் சுனில் ஷெட்டி, விலை உயர்வால் தக்காளி சாப்பிடுவதை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுனில் ஷெட்டி அளித்துள்ள பேட்டியில், “தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து இருப்பது எங்கள் வீட்டின் சமையல் அறையிலும் எதிரொலிக்கிறது. இதனால் சமீபகாலமாக நான் தக்காளி சாப்பிடுவதை குறைத்துக் கொண்டேன்.

நான் நடிகன் என்ற காரணத்தினால் தக்காளி விலை உயர்வு என்னை பாதிக்காது என்று யாரும் நினைக்க வேண்டாம். நாங்களும் இந்த விலை உயர்வு பாதிப்பை எதிர்கொள்கிறோம். நான் ஒரு ஓட்டல் நடத்தி வருகிறேன்.

அந்த ஓட்டலில் சமைக்கும் உணவின் சுவையிலும், தரத்திலும் தக்காளி விலை உயர்வு காரணமாக சமரசம் செய்ய வேண்டிய நிலைமை இருக்கிறது. காய்கறிகளையும், பழங்களையும் உணவு செயலிகள் மூலமே ஆர்டர் செய்கிறேன். அவற்றின் விலையை தெரிந்தால் அதிர்ச்சியாகி போவீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.