தெலுங்கில் பொங்கலன்று வெளியாகாதாம் நடிகர் விஜய்யின் வாரிசு படம்

சென்னை: தெலுங்கில் வெளியாகாதாம்... 2023ம் ஆண்டு பொங்கல் தினத்தையொட்டி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 'வாரிசு' படம் வெளியாகுமென்ற நிலையில் தற்போது படம் தெலுங்கில் வெளியாகாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் 'வாரிசு' படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. ஆரம்பத்தில் இது அரசியல் கதையம்சம் கொண்ட படம் என்று பல வதந்திகள் பரவிய நிலையில் படம் முழுக்க முழுக்க குடும்ப கதையம்சம் கொண்ட படம் தான் என்று இயக்குனர் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தில் ராஜுவின் ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் தமன் இசையமைக்க, ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ், குஷ்பு, ஜெயசுதா, சம்யுக்தா, சங்கீதா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்து வருகின்றனர். பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடிக்கும் இந்த படத்தில் சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியானது.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில் 'வாரிசு' படம் குறிப்பிட்ட தேதியில் தமிழில் மட்டுமே வெளியாகும் என்றும், தெலுங்கில் வெளியாகாது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏனெனில் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் 'ஆதிபுருஷ்' படம் வெளியாகவுள்ளது, தமிழில் விஜய்க்கு எப்படி அதிக வரவேற்பு உள்ளதோ அதேபோல தெலுங்கில் பிரபாஸுக்கு அதிக வரவேற்பு இருக்கும் என்பதால் 'வாரிசு' படத்தை அதே தினத்தில் வெளியிடாமல் ஒரு 4 அல்லது 5 நாட்கள் கழித்து படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபாஸ் நடிக்கும் 'ஆதிபுருஷ்' திரைப்படம் புகழ்பெற்ற வரலாற்று புராணங்களில் ஒன்றான ராமாயணம் நூலை தழுவி உருவாக்கப்படுகிறது. இந்த படத்தில் க்ரித்தி சனோன், சைப் அலி கான், சன்னி சிங், சோனல் சௌஹான் போன்ற பலர் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் படப்பிடிப்பு தற்போது வைஜாக்கில் நடைபெற்று வருகிறது. செப்டெம்பர் மாதம் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு முதல் சிங்கிள், டீசர், ட்ரைலர் என புரமோஷன் பணிகள் தொடங்க உள்ளது.