நடிகர் விஷால் நடித்துள்ள சக்ரா படத்தை ஓடிடியில் வெளியிட தடை இல்லை!

நடிகர் விஷால் நடித்துள்ள 'சக்ரா' திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்துக்கு தடை கேட்டு டிரைடெண்ட் ஆர்ட்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்திரன், சென்னை ஐகோர்ட்டில் கடந்த வாரம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், நடிகர் விஷால், தமன்னா ஆகியோர் நடித்த 'ஆக்‌ஷன்' திரைப்படத்தை தயாரித்தேன். இந்த படத்தை தியேட்டரில் வெளியிடுவது தொடர்பாக நானும், விஷாலும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி அவர் சுமார் ரூ.8½ கோடி தர வேண்டும். ஆனால், அவர் பணத்தை தரவில்லை. ஆனந்தன் என்ற இயக்குனர் என்னிடம் ஒரு கதை சொன்னார். அதை படமாக்க எடுக்க ஒப்பந்தம் செய்தேன்.

ஆனால், வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் அந்த படத்தை சக்ரா என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார். எனவே இந்த திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.


இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், சக்ரா படத்தை ஓடிடி இணையதளம் வாயிலாக வெளியிடும் நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்து இருந்தார். இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விஷால் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்காக தான் நடித்த ஆக்‌ஷன் திரைப்படம் லாபம் ஈட்டியுள்ளது. சக்ரா திரைப்படம் தொடர்பாக ஆக்‌ஷன் பட தயாரிப்பாளர் ரவீந்திரனுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து இந்த வழக்கை வருகிற 5-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, சக்ரா படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை நீட்டிக்க மறுத்துவிட்டார். இதனால், இந்த படம் ஓடிடியில் வெளியிட தடை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.