இந்த மண்ணை மிதித்தவனைக் கைவிடாது சென்னை - நடிகர் விவேக்

தமிழகத்தில் மொத்த 46,504 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பலியானோர் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 25,344 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 33,244 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் தற்போது தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக சென்னை மற்றும் அதன் அருகிலுள்ள 3 மாவட்டங்களுக்கு ஜூன் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு ஞாயிற்றுக்கிழமை எந்தவொரு தளர்வும் இல்லாமல் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பிடியில் சிக்கி தவிக்கும் சென்னை குறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

எல்லோரும் கழிவிரக்கம், அச்சமுடன் சென்னையைப் பார்க்கிறார்கள். பரவல் அதிகமாகக் காரணம் இங்கு அதிக மக்கள் குறைந்த இடத்தில் நெருங்கி வாழ்கின்றனர். தலைநகர்! பல மொழி, இனத்தோர் கலந்துள்ளனர். தன்னை வளர்த்தவனுக்கு இளநீர் கொடுப்பது தென்னை; இந்த மண்ணை மிதித்தவனைக் கைவிடாது சென்னை. அது மீளும்; வாழும்!. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.