நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் சின்னத்திரை நடிகர்-நடிகைகளிடம் விசாரணை

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சித்ரா தற்கொலைக்கு கணவர் ஹேம்நாத்தே காரணம் என்பது தெரியவந்தது. அதன்பின் நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜனவரி மாதம் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் சித்ராவும், நானும் கடந்த அக்டோபர் மாதமே பதிவு திருமணம் செய்து கொண்டதாக ஹேம்நாத் கூறியிருந்தார். சித்ராவுக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆகி இருப்பதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ விசாரணை நடத்தி வருகிறார்.

சித்ராவின் தாய்-தந்தையிடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நேற்று ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன், தாய் வசந்தா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. வரதட்சணை கொடுமையால் சித்ரா தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. இது தொடர்பாகவே ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.

ஹேம்நாத்தின் தாய்-தந்தை இருவரிடமும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டபோது அவர்கள், சித்ராவிடம் நாங்கள் வரதட்சணை எதையும் கேட்கவில்லை என்று கூறியுள்ளனர். இந்த விசாரணையின் போது சித்ரா வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தப்பட்டது தெரிய வந்தால் அது தொடர்பான வழக்கிலும் ஹேம்நாத் கைது செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில், சித்ரா தற்கொலை வழக்கில் சின்னத்திரை நடிகர்-நடிகைகளிடமும் விசாரணை நடத்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. முடிவு செய்துள்ளார்.