கமல்ஹாசனுக்கு என்னை திட்ட உரிமை இருக்கிறது - நடிகை குஷ்பு பேட்டி

தமிழக பா.ஜ.க. மீனவரணி சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 96–வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா நடுக்குப்பம் மீன்மார்க்கெட் அருகில் மீனவ பெண்களுக்கு அலுமினிய மீன்கூடை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மீனவரணி தலைவர் எஸ்.சதீஷ்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஏ.பார்த்திபன், மாவட்ட பொறுப்பாளர் காளிதாஸ், மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதி பா.ஜ.க. பொறுப்பாளர் நடிகை குஷ்பு கலந்து கொண்டு, அப்பகுதி மீனவ பெண்களுக்கு அலுமினிய மீன்கூடை மற்றும் மீன்கள் வழங்கினார். முன்னதாக அருகில் உள்ள பயண்டியம்மன் கோவிலில் வழிபட்ட பின்னர், அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகளிடம் சென்று பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது பலர் குஷ்புடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து வேளாண் சட்டங்கள் குறித்து குஷ்புக்கு ஒன்றுமே தெரியாது என்று கமல்ஹாசன் கூறியது தொடர்பாக நடிகை குஷ்பு கூறியதாவது:-

கமல்ஹாசன் எனது நல்ல நண்பர். அவருக்கு எல்லா அதிகாரங்களும் உள்ளன. 'அரசியல் களத்தில் நெருங்கிய நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை' என்று எனது அரசியல் ஆசான் கருணாநிதி எனக்கு சொல்லி கொடுத்திருக்கிறார். ஆனால் இன்றைக்கு தி.மு.க.வுக்கு எதிராகவே நான் பேசுகிறேன். ஏனெனில் கருணாநிதி மாதிரி ஒரு தலைவர் இல்லை. இப்போதுள்ள தி.மு.க.வுக்கு, கருணாநிதி காலத்தில் இருந்த தி.மு.க.வுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

கமல்ஹாசன் எனது நண்பர். என்னை திட்டலாம், என்னை அணைத்து கொள்ளலாம், என்னை பற்றி எதை வேண்டும் என்றாலும் சொல்லலாம். கமல்ஹாசனுக்கு அந்த உரிமை இருக்கிறது என்று நடிகை குஷ்பு கூறினார்.