சிவசேனாவில் இணைந்த நடிகை ஊர்மிளா மடோன்கர்!

இந்தி திரைப்பட நடிகை ஊர்மிளா மடோன்கர். இவர் இந்தியில் ரங்கீலா, சத்யா, ஏக் ஹசீனா தீ, பூட் உள்பட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தமிழில் இந்தியன் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தெலுங்கு, மலையாள மொழிகளிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். பின்னர் நடிப்பதில் இருந்து ஒதுங்கி கொண்ட மடோன்கர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.

தனது 46-வது வயதில் கடந்த 2019ம் ஆண்டு நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பா.ஜ.க.வின் கோட்டையாக இருந்து வரும் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டார். அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டார். இதன்பின்பு, மராட்டிய சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு முன் கடந்த ஆண்டு செப்டம்பரில், உட்கட்சி அரசியலை சுட்டி காட்டி கட்சி பணியில் இருந்து ஒதுங்கி கொண்டார். இதன்பின்னர் காங்கிரசில் இருந்து வெளியேறினார்.

சமீபத்தில், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டும், மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவை சாடியும் பேசிய நடிகை கங்கனா ரணாவத்துடன் டுவிட்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு அடுத்தபடியாக, சிவசேனா கட்சியில் இணையும் முடிவை மடோன்கர் வெளியிட்டார். கடந்த சில நாட்களாக இதுபற்றிய தகவல்கள் வெளியான நிலையில், அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் இதனை உறுதிப்படுத்தி உள்ளார்.

நடிகை ஊர்மிளா மடோன்கர் சிவசேனாவில் இன்று இணைவார் என சஞ்சய் ராவத் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். ஆளுநரின் ஒதுக்கீட்டின் கீழ் மராட்டிய சட்டசபை மேலவைக்கு அவரை முன்பே அக்கட்சி நியமனம் செய்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.