வரும் பொங்கலுக்கு நேருக்கு நேர் மோதும் அஜித் – விஜய் படங்கள்

சென்னை: அஜித் மற்றும் விஜய் - இருவரின் படங்களும் 11வது முறையாக மீண்டும் பொங்கல் அன்று திரையில் மோத உள்ளது.


தமிழ் சினிமாவில் பண்டிகை நாள் என்றாலே பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் என்பது எழுதப்படாத விதியாகும். நம் தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களுக்கு பஞ்சமில்லாததால் அவ்வப்போது இரு பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒருநாளில் வெளியாவதெல்லாம் சிவாஜி -எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே நடந்து வருகிறது.


அந்த வரிசையில் தமிழில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அஜித் மற்றும் விஜய் இதுபோன்ற பட ரிலீஸ்களை செய்து தங்களது ரசிகர்களை அவ்வப்போது உற்சாகப்படுத்துவதுண்டு. அந்த வரிசையில் 9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இவர்களின் இரு படங்களும் ஒரே நாளில் வெளியாக இருப்பதாகத் தகவல்கள் உலாவி வருகின்றன.

ஜில்லா மற்றும் வீரம் ஆகிய இருபடங்களும் 2014ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே நேரத்தில் வெளியானது. இவ்விரு படங்களும் ரசிகர்களிடம் நேர்மையான விமர்சனங்களைப் பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதன் பின் தற்போது விஜயின் வாரிசு படமும் அஜித்தின் 61வது படமும் 2023 ஆண்டு பொங்கலுக்கு வெளியாகலாம் எனத் தகவல் உலாவிவருகிறது.

இதனால் இவ்விருவரின் ரசிகர்களும் இப்போதே இணையத்தில் விஜயின் வாரிசு படத்திலும் அஜித்தின் 61வது படத்திலும் உள்ள பலம் மற்றும் பலவீனங்களைப் பற்றி சுவாரஸ்யமான விவாதத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.

இதற்கு முன்பு கோயமுத்தூர் மாப்பிள்ளை மற்றும் வான்மதி 1996 ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டும், பூவே உனக்காக மற்றும் கல்லூரி வாசல் 1996ம் ஆண்டு இரண்டாவது முறையாகப் பிப்ரவரி மாதமும், காதலுக்கு மரியாதை மற்றும் ரெட்டை ஜடை வயசு 1997ம் ஆண்டும், துள்ளாத மனமும் துள்ளும் மற்றும் உன்னைத் தேடி 1999ம் ஆண்டும், குஷி மற்றும் உன்னைக் கொடு என்னைத் தருவேன் 2000ம் ஆண்டும், இறுதியாக 10வது முறை ஜில்லா மற்றும் வீரம் 2014 ஆம் ஆண்டு ஒருநாளில் வெளியாகி இவ்விருவரின் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இந்த வரிசையில் 11வது முறையாக விஜயின் வாரிசு படமும் அஜித்தின் 61வது படமும் இணையுமா என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.