இரண்டாம் குத்து திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பாரதிராஜா கடும் கண்டனம்

சந்தோஷ் ஜெயகுமார் இயக்கி நடித்த 'இரண்டாம் குத்து' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை திரையுலகினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் தற்போது பாரதிராஜா இந்த படத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனமாக இருந்தாலும் அதில் மக்களுக்கு தேவையான சமூக கருத்தை ஜனரஞ்சகத்தோடு எம்ஜிஆர் சிவாஜி படங்களில் இருந்தது. கமல் ரஜினி காலத்திலும் ஆபாசம் கலக்காமல் குடும்பத்தோடு பார்க்கும் வகையில் தான் படங்கள் வந்தன.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் லாபம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஆபாசத்தின் உச்ச கட்ட காட்சிகள் கொண்ட ஒருசில திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த படங்கள் வெற்றி பெறுவதும் ஒரு பெரும் வேதனையாக உள்ளன.

இந்த நிலையில் சந்தோஷ்குமார் இயக்கிய 'ஹரஹர மகாதேவகி' மற்றும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய திரைப்படங்கள் காமெடி மற்றும் ஹாரர் என்ற பெயரில் ஆபாசத்தின் உச்சகட்டமாக பல காட்சிகள் இருந்தது. 'இரண்டாம் குத்து' பட விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன். சினிமா வியாபாரம் தான், ஆனால் கேவலமான நிலைக்கு வந்திருப்பது வேதனை அளிக்கிறது. கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தை போதிக்கவா முன்வந்தோம்? என்று குறிப்பிட்டுள்ளார். பாரதிராஜாவின் இந்த கண்டனம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.